அடியேனின் காண்ட பாவக காரகத்துவம் விளக்கம் பொறுமையாக நிதானமாக படியுங்கள்

லக்ன காண்டம்

வாழ்க்கை என்ற ஜாதக கோலத்தின் முதல் புள்ளி லக்னமாகும். உடல் கூறில் லக்னபாவம் என்பது தலையின் மேல் பகுதியான நெற்றி, மூளை போன்றவற்றை லக்ன பாவம் குறிக்கும். லக்ன பாவம் பன்னிரண்டு பாவங்களின் காரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஜாதகத்தை இயக்கும்.

லக்ன பாவத்திலிருந்து மற்ற பாவங்களுக்கு காரகங்கள் பிரித்து தரப்படுகின்றன. உடலில் உயிர் இருக்குமிடம் மூளை. எனவே லக்னம் என்பது மூலம் அதாவது உயிரையும் குறிக்கும் காரகமாகும். ஜாதகரின் உடலின் பொதுவான தோற்றத்தை லக்ன பாவமே நிர்ணயிக்கும்.

தலைவர்கள், தலைமை பண்பிற்கு சொந்தக்காரர்கள், திறமைசாலிகள், கௌரவமானவர்கள் போன்றவர்கள் லக்ன பாவத்தை கொண்டே அறியப்படுகின்றார்கள்.

ஜாதகரின் பொதுவான எண்ண ஓட்டங்கள், சுய முயற்சிகள், செயல் திறன், ஆரோக்கியம், பெருந்தன்மை, ஒழுக்கம், புகழ், நிர்வாக திறன், ஒரு துறையில் சாதனை படைக்கும் திறன், வெற்றி அல்லது தோல்வி, ஆண்மை மற்றும் பெண்மை தன்மைகள், உடலின் நோய் எதிர்ப்பு திறன், தான் என்ற எண்ணம், பணத்தை விட கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், பணத்தை இழந்து கௌரவத்தை பெறுதல் போன்றவைகள் லக்னபாவத்தின் காரகங்கள் ஆகும்.

2ம் காண்டம்

முகத்தில் உள்ள கண், மூக்கு, வாய், நாக்கு, பற்கள், தாடை, கன்னம், தொண்டை போன்றவற்றை 2ம் பாவம் குறிக்கும். ஒருவரது சொந்த கருத்தினை விளக்கும் பேச்சுத்திறன், பார்வை, சுவையான உணவினை உட்கொள்ளும் அமைப்பு, ஒருவரது முக லட்சணம் போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.

ஒருவருக்கு கிடைக்கக்கூடிய பணவரவு அவரது சொந்தபணம், கையிருப்பு பணம், செல்வம், சொந்த பணத்தை பாதுகாக்கும் திறன், எளிதில் பணமாக மாற்றத்தக்க பொருட்கள், ஒருவர் தனது சொத்தை அனுபவிக்கும் யோகம், வாழ்க்கைக்கு தேவையான பணம் போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.

3ம் பாவம் என்பது பத்திரங்களை குறிக்கும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றுக்கு பத்திரங்கள் அவசியமாகும். 2ம் பாவம் 3ம் பாவத்திற்கு 12ம் பாவம் என்பதால் 2ம் பாவ காரகங்களுக்கு பத்திரங்கள் தேவையில்லை. எனவே இதனை எப்போது நாம் நினைக்கிறோமோ அப்போதே (எந்த இடத்திலும்) எளிதில் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

லக்னம் என்பது ஜாதகரை மட்டும் குறிக்கும். 2ம் பாவம் என்பது ஜாதகரையும், அவரோடு சேர்ந்த அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையும் குறிக்கும்.

ஜாதகரின் தனம் வரும் வழிகள் மற்றும் தனம் செல்லும் வழிகள், பாலகல்வி, தாயின் மூத்த சகோதரம், உடல் உணவை ஏற்றுக்கொள்ளும் திறன், போன்றவைகள் 2ம் பாவத்தின் காரகங்களாகும்.

3ம் காண்டம்

உடல் கூறில் 3ம் பாவம் , காது, தோள்பட்டை, கைகள், கழுத்தெலும்பு, கழுத்திற்கு கீழ் செல்லும் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தின், ரத்த நாளங்கள், உணர்வுப் புலன்கள் போன்றவைகளை குறிக்கும். 2ம் பாவம் பேச்சு என்றால் 3ம் பாவம் எழுத்தினைக் குறிக்கும். எனவே எல்லா வித தகவல் தொடர்புகளையும், தகவல் பரிமாற்றங்களையும், ஒப்பந்தங்களையும் 3ம் பாவமே குறிக்கும்.

3ம் பாவம் இடமாற்றங்களையும், சிறு பயணங்களையும், பக்கத்து வீடு, பக்கத்து ஊர், அண்டை மாநிலம், அண்டை நாடுகள் போன்றவற்றைகளையும், சொத்துக்களை இழத்தல், விற்பனை செய்தல், பண்டமாற்று போன்றவற்றையும் குறிக்கும்.

ஆரம்ப கல்வி கற்பதற்கேற்ற மனச்சார்பு, அறிவு, குறுகிய பயணம், சாலை, சைக்கிள், பஸ், கடிதம், கணிதம், தபால் நிலையம், தொலைபேசி, கைபேசி, தொலைக்காட்சி, ரேடியோ செய்திகள், எதையும் சுருக்குதல், அடையாள சின்னங்கள், சான்றிதழ்கள், காசோலைகள், உலகில் உள்ள அனைத்து பதிவுகள், மத்தியஸ்தம், தூது செல்லுதல், பத்திரிகைகள், விளம்பரம், கையெழுத்து, நூலகம், அச்சு, குத்தகை, வதந்திகள், கோள் சொல்லுதல், மனக்குழப்பம், புத்தி பேதலித்தல், ஏற்கனவே இருப்பவைகளுடன் பலவற்றை புதிதாக சேர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய பரிணாமங்களை உருவாக்குதல் போன்றவைகள் 3ம் பாவத்தின் காரகங்களாகும்.

4ம் காண்டம்

உடலில் எப்போதும் இயங்கி கொண்டிருக்கும் நுரையீரல், இருதயம், சிறுநீரகம், ஜாதகரது அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் அனைத்தும் 4ம் பாவத்தின் காரகங்களாகும். சொந்த ஊர், சொந்த இருப்பிடம், ஒரே இடத்தில் இருத்தல் போன்றவைகளும் 4ம் பாவத்தின் காரகங்களாகும்.

5ம் பாவம் காமம், காதல், உடல் கவர்ச்சி, வர்ணனை, அழகு, உணர்வுபூர்வமாக சிந்தித்தல் போன்றவற்றை குறிக்கும். இதற்கு 12ம் பாவமான 4ம் பாவம் இதற்கு நேர்மாறான காரகங்களை குறிக்கும்.

நாத்திகம், தொன்று தொட்டு வந்த மரபு வழிகளை ஏற்காமல் புரட்சிகரமான சிந்தனைகள், எதையும் யாருக்கும் இலவசமாக தராமல் செல்வத்தை பெருக்குதல், ஆய்வுகள் என்று எதையும் செய்யாமல் இருப்பதை அப்படியே பயன்படுத்துதல், இயந்திர தனமான வாழ்க்கை, வெளிநாடு செல்லாமல் சொந்த நாட்டிலேயே ஒரே இடத்தில் இருத்தல் போன்றவைகளும் 4ம் பாவத்தின் காரகங்களாகும்.

தாய், ஆரம்பகல்வி, வீடு, நிலம், வாகனங்கள், தானிய வயல்கள், அந்தரங்க வாழ்க்கை, புதையல்கள், சுரங்கங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், திருட்டுச் சொத்தை வைத்துள்ள இடம், மூதாதையர் சொத்துக்கள், கிணறு, ஆறு, ஏரி, கல்லறை போன்றவை 4ம் பாவத்தின் காரகங்களாகும்.

5ம் காண்டம்

5ம் பாவம் இருதயம், முதுகுப்பகுதி, பாலியல் ஹார்மோன்கள், புத்திர உற்பத்திக்கான உயிர் அணுக்கள் போன்றவற்றைக் குறிக்கும். ஒரு உயிரை உருவாக்கும் சக்தி, குழந்தை வாரிசுகள், பொழுதுபோக்கு விஷயங்கள், அழகுப்படுத்திக் கொள்ளுதல், ரசனை, உல்லாசம், விளையாட்டு, கலைகளில் ஆர்வம், உடலை சிறிது கூட வருத்தாமல் இருத்தல், ஆழ்ந்த சிந்தனை, சிற்றின்பத்தில் அதிக நாட்டம், எதையும் உழைக்காமல் பெறுதல், கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங்குதல், காதல் வயப்படுதல், இன்ப உணர்வுகளை அதிக அளவில் நுகருதல், எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்தல், கற்பனை கலந்த உணர்வுகள் போன்றவைகள் 5ம் பாவத்தின் காரகங்களாகும்.

5ம் பாவ காரகங்களையே நினைத்து கொண்டிருந்தாள் இந்த பாவ காரகங்கள் 6,10ம் பாவச் செயல்களான உடல் உழைப்பு, தொழில் இவற்றில் வீழ்ச்சிகளை தந்துவிடும். மேலும் 5ம் பாவம், 6ம் பாவத்திற்கு 12ம் பாவமாக உள்ளதால், 6ம் பாவத்தின் காரகங்களான உடல் உழைப்பு, கடன், நோய், வழக்கு, பகைமை உணர்வு போன்றவற்றுக்கு எதிரான காரகங்களையும் கொண்டிருக்கும்.

விருந்தோம்பல், பாச உணர்வு, தமது செயல்களால் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துதல், கேளிக்கைகள், சூதாட்டம், சினிமா, நாடகம், இசைக்கச்சேரி, மந்திரம் ஜெபித்தல், தெய்வீக பாசுரம், மிகப்பெரிய இலக்கியப்படைப்புகள், எதையும் அளவுக்கு அதிகமாக வர்ணனை செய்தல், புண்ணியம் அல்லது பாவம் போன்றவற்றை வேறுபடுத்தி உணர்தல், அன்னதானம், உடை தானம், மருந்து தானம் போன்றவைகளும் 5ம் பாவத்தின் காரகங்களாகும்.

6ம் காண்டம்

6ம் பாவம் வயிறு, இரைப்பை, கல்லீரல் போன்றவற்றை குறிக்கும். எல்லாவித நோய்களையும், நோய் கிருமிகளையும் குறிக்கும். 6ம் பாவம் குணப்படுத்தக் கூடிய நோய்களாகும். எனவே நோய்களை குணப்படுத்தும் மருந்துகளையும், மருத்துவர்களையும் 6ம் பாவம் குறிக்கும்.

7 ம் பாவம் என்பது ஜாதகருக்கு சமமான நபர்கள், ஸ்பரிச சுகங்களை பரிமாறிக் கொள்ளுதல், பகிர்ந்து கொள்ளுதல், திருமண பந்தம், மக்கள் தொடர்பு, ஜாதகரை சந்திக்கும் நபர்கள், சமூகத்தோடு ஒத்துவாழும் எண்ணம் போன்றவற்றை குறிக்கும். இதற்க்கு நேர் எதிரான காரகங்களை 6ம் பாவம் குறிக்கும்.

ஜாதகரின் அந்தஸ்திற்கு சமமில்லாத வேலைக்காரர்கள், அடிமைகள், செல்லப் பிராணிகள், வீட்டு விலங்குகள், ஜாதகருக்கு கட்டுப்படும் நபர்கள் அல்லது ஜாதகர் வெற்றி கொள்ளும் நபர்கள் போன்றவற்றையும், ஸ்பரிச சுகம் இல்லாதிருத்தல், திருமண பந்தத்தினை முறித்து கொள்ளுதல் அல்லது திருமண பந்தம் அமையாதிருத்தல் அல்லது வாழ்க்கை துணை மீது அதிக ஆதிக்கம் செலுத்துதல் போன்றவற்றையும் 6ம் பாவம் குறிக்கும்.

6ம் பாவத்திற்கு மற்றவரிடம் பணிபுரிதல், மாத சம்பளம், தொழிலாளர்கள், நோய், பகைமை, வழக்கு, கஞ்சத்தனம், பேராசை, ஆணவம், தற்பெருமை, மற்றவர் பொருளை அபகரித்தல், மற்றவரை தோல்வியடைய செய்து வெற்றி பெறுதல், எதையும் மற்றவர்களை விட சிறப்பாக செய்தல், தற்காலிக பணவரவு அல்லது திருப்பி தரக்கூடிய பணம் (கடன்), மற்றவரிடமிருந்து தனித்து இருப்பதால் சிறைச்சாலை, தனிமையான வாழ்க்கை, மற்றவரை உதாசீனப்படுத்துவதால் எதிரிகள் அதிகரித்தல் போன்றவைகளும் 6ம் பாவ காரகங்களாக அமைகின்றது.

7 ம் காண்டம்

உடல் கூறில் 7 ம் பாவம் அடிவயிறு, உடலில் நடுப்பகுதி, தொப்புள், சிறுநீரகம், கர்பப்பை போன்றவற்றைக் குறிக்கும். லக்ன பாவம் என்பது ஜாதகரை குறிக்கும். லக்னம் 7 ம் பாவம் இரண்டும் ஒன்றுக்கொன்று சமமான நிலையிலேயே இருப்பதால், 7 ம் பாவம், லக்னம் என்ற ஜாதகருக்கு சமமான நபர்களையும், லக்னம் என்ற ஜாதகருக்கு சமமான உறவுமுறைகளையும் குறிக்கும்.

7 ம் பாவத்தை ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு உரிய பாவமாக நம் முன்னோர்கள் கூறினார்கள். கணவன், மனைவி உறவினை தவிர்த்து மற்ற உறவு முறைகளான அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமா, மாமி, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, குழந்தை போன்ற உறவுகள்.

7 ம் பாவம் என்பது ஜாதகருக்கு சமமான நபர்களை குறிப்பதால் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதல், வாடிக்கையாளரையும், ஜாதகருக்கு உள்ள பொதுஜன தொடர்பினையும், ஜாதகருக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தையும், ஜாதகர் மற்றவரிடம் சகஜமாக பழகுபவரா அல்லது பொருளாதார ரீதியில் பழகுபவரா என்பதையும், மற்றவர்களால் ஜாதகர் ஏமாற்ற படுவாரா என்பதையும் 7 ம் பாவம் மூலம்ஒருவரின் ஜாதகத்தில் அறியலாம்.

ஜாதகரின் திருமண வாழ்க்கை, வாழ்க்கை துணை பற்றின விபரங்கள், பொதுமக்களின் ஆதரவு, பொதுக்கூட்டங்கள், திருடனை பற்றின விபரங்கள், எதிர்பாலின ஸ்பரிச சுக பரிமாற்றங்கள், மற்றவருடனான நீண்ட நாள் பழக்க வழக்கங்கள், வியாபாரத்தில் பங்குதாரர்கள், ஜாதகரின் வெளிப்படையான குணம், எதிலும் மற்றவரை இணைத்து கொள்ளுதல், இரண்டாவது குழந்தை, மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், பிறரைச் சார்ந்திருத்தல், போன்றவை 7 ம் பாவத்தின் காரகங்களாகும்.

8ம் காண்டம்

8ம் வீட்டை கொண்டே ஜாதகரின் வாழ்நாளின் அளவு அதாவது ஆயுள் நிர்ணயிக்கப்படுகின்றது. 8ம் பாவம் வலி, வேதனை, துரோகம், துக்கம், துரதிருஷ்டம், போராட்டம், விபத்து, உடல் உறுப்புகள் பழுது, மற்றவரால் ஜாதகர் பொருள் திருடப்படுதல்.

தெய்வகுற்றம் அல்லது தெய்வத்தின் அனுகிரகம் கிடைக்காமல் போவது (இறையருள் இன்றி ஒரு துரும்பும் அசையாது), அதனால் ஜாதகரால் எந்த செயலையும் தான் நினைத்தாற்போல் செய்ய முடியாமல் போவது, ஜாதகரின் சிந்தனை அதர்ம வழியில் செல்வது, அதனால் ஜாதகருக்கு வரும் அவமானம், கேட்ட பெயர் எடுப்பது போன்றவையும், எதையும் எளிதாக பெற முடியாமல் (இறையருள் இல்லாதிருப்பதால்) பெறுவதற்கு அதிகமாக போராடியும், எதையும் பெற முடியாமல் போவது, ஜாதகரின் முயற்சிகள் வீணாகுதல், ஜாதகரின் திறமை, குடத்தில் இட்ட விளக்கு போல் வெளியுலகத்திற்கு தெரியாதிருத்தல் போன்றவை 8ம் பாவத்தின் காரகங்களாகும்.

தற்கொலை, கொலை, துர்மரணம், உடல் உறுப்புகள் சேதமடைதல், கொள்ளை, எதிரிகள் தொல்லை, எல்லாவித தடைகள், வீண்பழி, நஷ்டப்படுதல், இன்சூரன்ஸ், உயிர், வாரிசு, சீதனம், லஞ்சம், இறந்தவரின் பணம், அறுவை சிகிச்சை, ஜாதகரின் சக்திக்கு மீறின பெருங்கடன், தன்னிலையை தாழ்த்தி கடுமையாக உழைத்தல், (மூட்டை தூக்குதல் போன்றவை), ஒரே நேரத்தில் வரும் பலவித நோய்கள், நாட்பட்ட நோய்கள், அதிக வலி வேதனைகளை தரும் நோய்கள், சட்ட விரோதமாக கிடைக்கக்கூடிய பொருட்கள், அதிகபடியான கோபம், இளமையிலேயே தந்தையை இழத்தல், இயற்கை சீற்றங்கள், போர், ஜாதகர் கனவிலும் நினைவிலும் பார்க்காத எதிர்பாராமல் நடைபெறும் எல்லாவித நன்மை, தீமையான சம்பவங்கள், தெய்வ நிந்தனை போன்றவை 8ம் பாவத்தின் காரகங்களாகும்.

9 ம் காண்டம்

9 ம் பாவம் நேர்மை, நம்பிக்கை, விசுவாசம், தெய்வ நம்பிக்கை, கருணை, மனிதாபிமானம், ஆராய்ச்சி திறன், உள்ளுணர்வு, உபாசனை, மத நம்பிக்கை, தான தருமம், தியாக சிந்தனை, உயர்கல்வி போன்றவைகள் ஒருவரை மற்றவரிடமிருந்து பெரிய அளவில் (தனித்தன்மை) வேறுபடுத்திக் காட்டும்.

9 ம் பாவம் கர்ம (செயல்பாடு, கடமை) திரிகோனங்களான 2, 6, 10ம் பாவங்களுக்கு 8, 4, 12ம் பாவங்களாக அமைவதால் லக்னம் என்ற ஜாதகரை எந்த ஒரு தொழில் சார்ந்த செயலையும் செய்ய விடாமல் 9ம் பாவம் தடுக்கும். 9ம் பாவம், லக்னத்திற்கு முன் திரிகோணம் என்பதால் உறவுமுறையில் தந்தையையும், தந்தையின் மூதாதையர்களையும் குறிக்கும்.

பெருந்தன்மை, முன் யோசனை, நீண்ட தூரப்பயணம், தீர்த்த யாத்திரை, கடற்பயணம், விமான பயணம், வெளிநாடு, அன்னிய நபர்கள், உயர்கல்வி, பல்கலைக் கழகங்கள், இயற்கை, தெய்வ அனுக்கிரகம், கோவில், சர்ச், மசூதி, குல தெய்வம், வணங்கக்கூடிய நபர்கள், குரு, வெளிநாட்டுச் செய்திகள், நீண்ட தூர செய்திகள், வானொலி, தொலைக்காட்சி, கம்பியில்லா தந்தி, ஆவியுலக தொடர்புகள், உலக அனுபவங்கள், சட்டம் – ஒழுங்கு, நீதித்துறை, நீதி நெறி, சட்டப்பூர்வமாக நடுவராக இருந்து தீர்ப்பளித்தல் (நீதிபதி), ஏற்றுமதி, இறக்குமதி, சர்வ தேச வர்த்தகம், பரம்பரை சொத்து, பண முடக்கம், தொழில் நஷ்டம் மேலும் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களால் கிடைக்கும் நன்மை, தீமைகள் போன்றவை 9ம் பாவத்தின் காரகங்களாகும்.

10ம் காண்டம்

உடல் கூறில் 10ம் பாவம், தொடை பகுதியையும், எப்போதும் ஒரு பொருளை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் உறுப்புகளையும் (கிட்னி, குடல் போன்றவற்றை) குறிக்கும். கர்ம திரிகோண ஸ்தானங்கலான 2, 6, 10-ல் 10ம் பாவம் வலிமையான பாவமாகும். உத்யோகம் (தொழில்) புருஷ லட்சணம் என்பது பழமொழி. ஒருவருக்கு கிடைக்கும் அந்தஸ்து, புகழ், அங்கீகாரம் போன்றவை அவர் செய்யும் தொழிலைக் கொண்டே அளவிடப்படுகின்றது.

பாவ கணித கணக்கீட்டில் 10ம் பாவம் ஒரு முக்கியமான பாவமாகும். இந்த பாவம் ஜாதகத்தின் உச்சி அல்லது சிகரம் என்று அழைக்கப்படுகின்றது. உலகில் உள்ள அனைத்து தொழில்களையும் 10ம் பாவம் தெரிவிக்கும். ஒருவர் எந்த தொழில் அல்லது உத்தியோகத்தில் இருந்தாலும் அதில் சிறப்படைய அதாவது தொழில் ரீதியில் அந்தஸ்தினை பெற 10ம் பாவம் முக்கிய பங்கு வகிக்கும். ஒருவர் அதிகாரம் கொண்ட (பெரிய பதவிகள்) தொழிலில் நீடித்த நிலையில் இருப்பதற்கு 10ம் பாவம் வலுபெற வேண்டும்.

மேலும் ஜீவனம், தொழில் ரீதியாக கிடைக்கும் சமூக அந்தஸ்து, நிர்வாகத்திறன், கடமை, பெற்றோருக்கு கர்ம சடங்கு, எதிலும் திருப்தியற்ற மனோநிலை, அரசாங்கத்திடமிருந்து வெகுமதி, வாழ்க்கை துணையின் சொத்து, இளைய சகோதரருக்கு ஆபத்து, மூத்த சகோதரருக்கு விரையம், சங்க கூட்டங்களுக்கு தலைமை தாங்குதல், தத்துக்குழந்தை, வாழ்க்கை துணையின் தாயை (மாமியார்) பற்றின விபரங்கள், குழந்தையின் நோய் பற்றிய விபரங்கள், எப்போதும் ஒரு பொருளை உற்பத்தி செய்து கொண்டிருத்தல் போன்றவைகளும் 10ம் பாவத்தின் காரகங்களாகும்.

11ம் காண்டம்

11ம் வீட்டைக் கொண்டே ஒருவர் எளிதில் திருப்தியடைவாரா அதாவது போதும் என்ற மனப்பான்மை உடையவரா என்பதை அறிய முடியும். இந்த 11ம் பாவம் லக்னத்திற்கு தீமையை செய்யும் 12ம் பாவத்திற்கு 12ம் பாவமாக அமைகின்றது.

எனவே 12ம் பாவத்தின் காரகங்களான தோல்வியடைதல், நஷ்டப்படுதல், முதலீடு செய்தல், செயலற்ற நிலையில் இருத்தல், புரியாத ரகசியங்கள், தாழ்வுமனப்பான்மை, வரவுக்கு மீறிய செலவுகள், எல்லாவற்றிலும் தடைகள் போன்ற லக்னம் எந்த ஜாதகருக்கு தீமையை செய்யும் காரகங்களுக்கு எதிரான காரகங்களை 11ம் பாவம் கொண்டிருக்கின்றது.

ஒரு பாவத்திற்கு 3ம் பாவம் என்பதை அந்த பாவத்திற்கு அடுத்த பரிணாம வளர்ச்சி அல்லது அதே போன்று அதற்கு பின் உருவாகும் அதற்கடுத்த நிலைகள் என்பதை ஏற்கனவே இந்நூலில் குறிப்பிட்டுள்ளதை வாசகர்கள் கவனிக்கவும். அந்த வகையில் பாவத்தின் 3ம் பாவம், லக்னம் (ஜாதகர்) என்பதால், 11ம் வீடு மூத்த சகோதரரையும் அல்லது சகோதரியையும் குறிக்கும்.

அதே போல் 11ம் பாவம், 5ம் பாவத்திற்கு 7ம் பாவமாக வருவதால் ஜாதகரின் குழந்தைகளுடைய வாழ்க்கை துணைகளை அதாவது மருமகன், மருமகள் போன்றவர்களையும் குறிக்கும்.

மேலும் ஒருவருடைய விருப்பம், அபிலாசைகள், குறிக்கோள், வெற்றிகள், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி (வைட்டமின்கள்), ஜாதகரின் நெருங்கிய நண்பர்கள், ஜாதகரின் நலம் விரும்பிகள், ஜாதகரை முகஸ்துதி செய்பவர்கள், சேமிக்கும் பழக்க வழக்கங்கள், முயற்சிகள் சித்தியாதல், ஆசைகள் நிறைவேறிய பின் கிடைக்கும் திருப்தி, நீடித்த நட்பு, ஒருமித்த கருத்து உடையவர்களின் குழு, சங்கம், கூட்டம், மாநாடு, தந்தை வழி சித்தப்பா, உச்ச நிலை கல்வி, முழு அறிவை பெறுதல், ஒரு துறையில் முழுமையாக பயின்று டாக்டர் பட்டம் பெறுதல், புத்தி கூர்மை, பாராளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், வியாதி குணமடைதல், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புதல் போன்றவைகளும் 11ம் பாவத்தின் காரகங்களாகும்.

12ம் காண்டம்

உடல் கூறில் 12ம் பாவம் பாதங்களையும், உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களையும் குறிக்கும். லக்னத்திற்கு 6, 8, 12ம் வீடுகளை (தீய) மறைவு ஸ்தானங்கள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

12ம் பாவம் என்பது, லக்னம் என்ற ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரு பாவமாகும். மேலும் 12ம் பாவம் என்பது (அது அமையும் நிலையை பொருத்து) ஜாதகருடைய பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து முழுவதுமாக விடுபட்டு, இந்த பிரபஞ்சத்துடன் (இயற்கை என்ற இறைவனுடன்) கலப்பதை காட்டுவதால், இதை மோட்ச (முடிவு) ஸ்தானம் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

12ம் பாவம், உடல் உறுப்புகள் மற்றும் மூளை செயலிழந்து போதல், ஜாதகர் தன்னைப்பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களுடன் சேர்ந்து இல்லாமல் தனிமையில் இருத்தல், எதிலும் ஜாதகர் செயல்படாதிருத்தல், தோல்வி, மறைந்து வாழ்தல், சமூக கட்டுப்பாடுகளால் தள்ளி வைக்கப்படுதல், சிறைச்சாலைகள், அனாதை விடுதிகள், ஜாதகருக்கு ஏற்படும் எல்லாவித தடைகள், நஷ்டங்கள், வரவுக்கு மீறிய செலவுகள், அதிகமான வட்டியுடன் கூடிய கடனை திருப்பி செலுத்துதல், மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் திணறுதல், ரகசிய சிறையில் இருத்தல், மருத்துவமனையில் சிகிச்சையை பெறுதல், எல்லாவிதமான தண்டனைகள் மற்றும் அபராதங்கள், எல்லாவற்றையும் துறந்து துறவு போவது போன்ற காரகங்களை கொண்டுள்ளது.

அதே நேரத்தில் 12ம் பாவம் இடமாற்றம், வெளிநாடு செல்லுதல், முற்றிலும் புதிய சூழ்நிலையில் வாழ்தல், வெளிநாட்டில் குடியுரிமையை பெறுதல், பணத்தை சொத்துக்கள் போன்றவற்றில் முதலீடு செய்தல், தனது வேலையை மற்றவரிடம் தந்து விட்டு நிம்மதியாக இருத்தல், இரண்டாவது தொழிலை செய்தல், தொழிலில் அடுத்தடுத்த கிளைகளை நிறுவுதல், எல்லா வேலைகளையும் முடித்து படுக்கைக்கு செல்லுதல், உறக்கம், புதியனவற்றை கண்டுபிடித்தல் போன்ற காரகங்களையும் கொண்டுள்ளது.

சிறப்பு காண்டங்கள்

13.சாந்தி காண்டம்

முற்பிறவியில் பிறந்த இடம், செய்த நன்மை தீமை, முற்பிறப்பில் செய்த பாவங்களால் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பம் மற்றும் துன்பத்தை நீக்குவதற்குண்டான தெய்வீக பரிகாரங்கல் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

14. தீட்சை காண்டம்

தெய்வீக ஆற்றலைப் பெறுவதற்குண்டான மந்திரமுறைகளையும்; எதிரிகளின் தொல்லைகளிலிருந்து மீண்டு வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காக உடலில் அணிந்து கொள்ள வேண்டிய தெய்வீக எந்திரங்கள் மற்றும் இல்லத்தில் வைத்து பூசை செய்யவேண்டிய சித்தர் குளிகைகள் (ரசமணிகள்) போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

15. ஔடதக் காண்டம்

நோய்கள், நோய்களைத் தீர்க்கும் மூலிகை மருந்துகள், மருந்துகளை உட்கொள்ளும் விதங்கள் மற்றும் சித்த மருந்துகளை தயாரிக்கும் முறைகள் போன்றவைகளின் பலன்களை சொல்லும் குருநூல்.

16. திசாபுக்தி காண்டம்

நவகிரக திசைகள் மற்றும் புக்திகளின் காலங்களில் ஏற்படும் நன்மை தீமைகளின் பொதுப் பலன்களை சொல்லும் குருநூல்.

17. பொதுவாழ்வு (அரசியல்) காண்டம்

சமூக சேவை மற்றும் அரசியல் வாழ்க்கைப் பற்றிய பலன்களை சொல்லும் குருநூல்.

18. ஞானகாண்டம்

யோக ஞான மார்கங்கள், முக்தி மார்கங்கள், தெய்வீக, உபதேசங்கள், தெய்வீக தரிசங்கள் மற்றும் தெய்வீக உதவிகள் பற்றிய பலன்களை சொல்லும் குருநூல்.

19. பிரசன்ன பிரச்சனை காண்டம்

இக்காண்டத்தின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் பல்விதமான பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும், கேள்விகள் மூலம் விடைகள் பெறலாம். ஒரு பிரசன்ன பிரச்சனை காண்டத்தில் அதிகபட்சம் மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கிடைக்கும்.